வ.உ.சி.துறைமுகம், விமானநிலையம், மாநகராட்சியில்குடியரசு தினவிழா


தினத்தந்தி 26 Jan 2023 6:45 PM GMT (Updated: 26 Jan 2023 6:47 PM GMT)

தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகம், விமானநிலையம், மாநகராட்சியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று குடியரசு தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

குடியரசு தினவிழா

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர் சிறப்பாக செயல்பட்ட கப்பல் முகவர்கள், சுங்கத்துறை முகவர்கள், சரக்கு பெட்டகம் இயக்குபவர்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு விருதுகளை வழங்கி பேசினார்.

அப்போது, துறைமுகத்தில் சரக்கு கையாளுவதற்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி துறைமுக நுழைவுவாயிலை 153 மீட்டரில் இருந்து 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி, பொதுசரக்குதளம் 9-ஐ சரக்கு பெட்டக முனையமாக மாற்றுதல், நிலக்கரி தளம் - 1 மற்றும் 2, வடக்கு சரக்குதளம் 1-ல் கன்வேயர் இணைப்பு மூலம் கையாளுவதற்கான ஒப்பந்த விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. வடக்கு சரக்குதளம் 3-ஐ எந்திரமயமாக்கல் மற்றும் ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

நீர் விளையாட்டு மையம்

2030-ம் ஆண்டுக்குள் அனைத்து பெருந்துறைமுகங்களும் மின்சாரத்தில் முழுமையாகத் தன்னிறைவு பெறக்கூடியதாக மாற்றப்படும் என்று கப்பல்துறை அமைச்சகம் கூறி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 400 கிலோவாட் மேற்கூரை சூரிய மின் உற்பத்திநிலையம், 5 மெகாவாட் தரைதள சூரிய மின் நிலையம் மற்றும் 2 மெகாவாட் காற்றாலை மின்சார உற்பத்தி போன்ற பல்வேறு திட்டபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் முடிவடையும் போது, புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி மூலம் பெறப்படும் முழு மின்ஆற்றலை கொண்டு துறைமுகத்துக்கு தேவையான மின்ஆற்றலை பூர்த்தி செய்ய முடியும். இதன் மூலம் முழுமையாக புதுபிக்கப்பட்ட மின்ஆற்றலை கொண்டு செயல்படும் இந்தியாவின் முதல் பெருந்துறைமுகமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் திகழ்வதோடு, இந்தியாவின் முதல் பசுமை துறைமுகமாக மாறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வ.உ.சி. துறைமுக ஆணையம் ரூ.45 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் தூத்துக்குடி கடற்கரை பகுதியில் நீர் விளையாட்டு மையம் அமைத்தல் உள்ளிட்ட 8 திட்டங்கள் மொத்தம் ரூ.1 கோடியே 84 லட்சத்து 15 ஆயிரம் செலவில் மேற்கொள்வதற்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வரும் காலங்களில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து துறைமுக பள்ளி மைதானத்தில் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள கடற்கரை கைப்பந்து மைதானத்தை வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத்தலைவர் பிமல்குமார் ஜா மற்றும் துறைமுக அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

விமான நிலையம்

தூத்துக்குடி விமான நிலையத்தில் நடந்த விழாவுக்கு விமானநிலைய இயக்குனர் பி.சிவபிரசாத் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து, பாதுகாப்பு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து விமான நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

விழாவில் விமான நிலைய பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் உமாதேவி, விமான நிலைய எலக்ட்ரிக்கல் துறை துணைப் பொது மேலாளர் பிரான்சிஸ் சேவியர், தகவல் தொடர்பு பிரிவு உதவி பொது மேலாளர் பிரிட்டோ, விமான நிலைய மேலாளர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 74-வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாநகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மஞ்சப்பை மற்றும் மின் கோபுரம் அமைப்பதற்கு நிதி உதவிய நிறுவனத்தினரை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாநகர துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நூலகம்

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் முதல்நிலை நூலகர் மா.ராம்சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் குறித்து பேசிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் அலுவலக கண்காணிப்பாளர் ஆ.பிரேமநாயகம், நூலகர்கள் லதா, அந்தோணி, தனுஷ்கோடி மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story