தென்மாத்தூர் கிராமத்தில் பிற்கால சோழர், பல்லவர் கால கல்வெட்டு, சிற்பங்கள்


தென்மாத்தூர் கிராமத்தில் பிற்கால சோழர், பல்லவர் கால கல்வெட்டு, சிற்பங்கள்
x
தினத்தந்தி 25 Jun 2023 12:15 AM IST (Updated: 25 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகில் தென்மாத்தூர் கிராமத்தில் பிற்கால சோழர், பல்லவர் கால கல்வெட்டு, சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகில் தென்மாத்தூர் கிராமத்தில் பிற்கால சோழர், பல்லவர் கால கல்வெட்டு, சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

அருணாசலேவரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பழம்பெருமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் உள்ள 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த 3-ம் ராஜராஜன் காலத்து கல்வெட்டு உள்ளது.அந்த கல்வெட்டில் திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்த மெய்கண்ட தேவ நாயனார், மாத்தூர் என்கிற ஊரில் தனது பெயரில் மெய்கண்டீஸ்வரமுடைய நாயனார் கோவிலும் மெய்கண்ட தேவ புத்தேரி என்ற ஏரியை வெட்டுவித்ததையும் குறிப்பிடுகிறது.

அந்த கல்வெட்டில் குறிப்பிடும் மெய்கண்டீஸ்வரமுடைய நாயனார் கோவில் மற்றும் ஏரி குறித்து திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பிரகாஷ், பாலமுருகன், மதன்மோகன், பழனிசாமி, சிற்றிங்கூர் ராஜா, கிராம உதவியாளர் ஜெகந்நாதன் ஆகியோர் கூட்டாக திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள தென்மாத்தூர் கிராமத்தில் ஆய்வு செய்தனர்.

அப்போது பல்வேறு வரலாற்றுத் தடயங்கள் கிடைத்துள்ளன. இது குறித்து அவர்கள் கூறியதாவது:-திருவண்ணாமலை கோவில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட மெய்கண்டீஸ்வரமுடைய நாயனார் என்பவர் சிவனஞான போதம் என்ற சைவ சித்தாந்த நூலின் ஆசிரியர் ஆவார்.

சோழர் காலத்தைச் சேர்ந்தது

அவர் இவ்வூரில் எழுப்பிய சிவன் கோவில் குறித்து விசாரித்த போது அவ்வாறு தற்போது கோவில் ஏதும் இல்லை. ஆனாலும் ஊரில் சோழர்காலத்து சிவலிங்கம், நந்தி, கோவில் கல்தூண்கள் ஆகியவை ஆங்காங்கே உள்ளன. அதனை ஆய்வு செய்து பார்த்ததில் அவற்றின் சிற்ப அமைப்பு பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்ததாக உள்ளது.

மேலும் அருணாசலேஸ்வரர் கோவில் கல்வெட்டு கூறும் காலத்துடன் பொருந்தி போவதால் இங்கு மெய்கண்டீஸ்வரமுடைய நாயனார் கோவில் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கோவிலை அப்புறப்படுத்தி வேறு கட்டிடம் கட்டி விட்டதால் மற்ற விவரங்கள் அறியப்படவில்லை.

மேலும் அந்த ஊரின் மேற்கு பகுதியில் மரத்தடியில் ஒரு 4 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட கற்பலகையில் ஒரு அடியாரின் சிற்பம் திருவண்ணாமலையை நோக்கி காணப்படுகிறது. இதன் சிற்ப அமைவு பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்தது என்பதால் இவர் மெய்கண்ட நாயனாராக இருக்க வாய்ப்புள்ளது.

பல்லவர் கால கல்வெட்டு

அந்த பகுதியில் பெரிய ஏரியின் தென்கோடியில் உள்ள தூம்பில் ஒரு அரைவட்ட கல்லில் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னன் நந்தி வர்மனின் 10 ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று உள்ளது. தென்மாத்தூரின் மேற்குப்பகுதியில் உள்ள பாறையில் குடை மற்றும் பாதம் கோட்டுருவத்துடன் பிற்கால சோழர்காலத்தைச் சேர்ந்த 4 வரி கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டது.

தென்மாத்தூர் கிராமத்தில் கிடைக்கக்கூடிய நந்தி, சிவலிங்கம், கோவில் கட்டுமான கல்தூண்கள், ஏரித்தூம்பு ஆகிய தடயங்கள் திருவண்ணாமலை கல்வெட்டில் குறிப்பிடும் திருவெண்ணைநல்லூர் மெய்கண்ட நாயனார் ஏற்படுத்தியதாக கருத இடமளிக்கிறது.

தென்மாத்தூர் கிராமத்தில் இவ்வளவு சிறப்பான வரலாற்று தடயங்கள் கிடைத்துள்ளது ஆய்வாளர்களிடைேய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, இதை அரசு ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story