அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
திருப்பூர்


கஸ்பா-பழையகோட்டை கிராமத்தில் நடைபெற்ற அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

அத்தனூர் அம்மன் கோவில்

திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் அருகே உள்ள கஸ்பா- பழையகோட்டை கிராமத்தில் அத்தனூர் அம்மன் கோவில் ஆகம முறைப்படி புதிதாக கற்கோவில் அமைத்து கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், மூலஸ்தான விமானம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது., வேம்பரசு விநாயகர் சன்னதி, கன்னிமார், கருப்பணசாமிக்கு துவாரபாலகர், துவார பாலகி, தூரிக்கல் அமைத்தும் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவிற்கு பழையகோட்டை பட்டக்காரர் ராஜ்குமார் மன்றாடியார், சிவ்பார்வதி மன்றாடியார் கல்வி குழுமங்களின் செயலாளர் எஸ்.நவீன் மன்றாடியார், அ.மகேன் மன்றாடியார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். விழா கடந்த 29-ந் தேதி காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது.

கும்பாபிஷேகம்

பக்தர்கள் முளைப்பாலிகை, தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர் மாலை 5.30 மணிக்கு முதல் கால யாக பூஜையும், விக்னேஸ்வர பூஜை, கும்பங்கள் ஆலயம் வலம் வருதல், யாக மண்டப பூஜையும் நடைபெற்றது. யாக கால பூஜைகள், புதிய பிம்பங்களுக்கு கண் திறத்தல் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை 5.30 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டு, 9 மணிக்கு யாக சாலையில் இருந்து திருக்குடங்கள் புறப்பட்டு, 9.35 மணிக்கு விநாயகர், அத்தனூர் அம்மன், கன்னிமார் கருப்பணசாமி விமானங்களுக்கும், காலை 10 மணிக்கு அத்தனூர் அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

11 மணிக்கு கோபூஜை நடத்தப்பட்டு, அத்தனூர் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர் இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது.

திருப்பணி குழுவினர்

பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பக்தர்கள், பயிரன் குல மக்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

1 More update

Next Story