அத்தனூரம்மன் கோவில் தேர்த்திருவிழா


அத்தனூரம்மன் கோவில் தேர்த்திருவிழா
x
தினத்தந்தி 8 Sept 2022 1:45 AM IST (Updated: 8 Sept 2022 1:46 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் பிரசித்தி பெற்ற அத்தனூரம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. நள்ளிரவில் பாரம்பரிய முறைப்படி தீப்பந்த ஊர்வலமும் நடந்தது.

சேலம்

வாழப்பாடி:-

வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் பிரசித்தி பெற்ற அத்தனூரம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. நள்ளிரவில் பாரம்பரிய முறைப்படி தீப்பந்த ஊர்வலமும் நடந்தது.

கோவில் தேர்த்திருவிழா

வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் மாரியம்மன், அத்தனூரம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெகு விமரிசையாக தேர்த்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவின் போது, தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில், நள்ளிரவில் மின் விளக்குகளை பயன்படுத்தாமல், பாரம்பரிய முறைப்படி தீப்பந்தங்களை கையில் ஏந்தி 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ஊர்வலமாக சென்று அம்மனுக்கு சக்தி அழைத்து வரும் வினோத வழிபாட்டு முறை இன்றளவும் மரபு மாறாமல் தொடர்ந்து வருகிறது.

சிங்கிபுரத்தில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.50 லட்சத்திற்கு மேல் செலவு செய்து சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய பிரமாண்டமான இரு மரத்தேர்கள் வடிவமைக்கப்பட்டு தேர்த்திருவிழா ஒரு வாரத்திற்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவையொட்டி சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படும் அத்தனூரம்மனுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் சக்தி அழைக்கும் விழா நடைபெற்றது.

தீப்பந்த ஊர்வலம்

சிங்கிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் முதல் வாலிபர்கள், முதியவர்கள் வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் திரண்டு வந்து, மாரியம்மன் சன்னதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த விளக்கெண்ணெய் தோய்க்கப்பட்ட தீப்பந்தங்களை கையில் ஏந்தியபடி, அம்மனை சக்தி அழைத்து வர மிகுந்த ஆரவாரத்தோடு ஊர்வலமாக சென்றனர். இந்த காட்சி, பக்தி பரவசத்தை ஏற்படுத்தியதோடு, இவ்விழாவை காண குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களையும் பொதுமக்களையும் மிரள வைத்தது.

தேரோட்டம்

விதவிதமான மின் விளக்குகள் பயன்படுத்தப்படும் இந்த கால கட்டத்திலும், பாரம்பரிய முறைப்படி, மரபு மாறாமல் நள்ளிரவு நேரத்தில் மின்விளக்குகளை பயன்படுத்தாமல், தீப்பந்தங்களை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்ற ஆண்கள், அம்மனை சக்தி அழைத்து வந்த, பிரமிக்க வைக்கும் இந்த வினோத வழிபாட்டு ஊர்வலம் குறித்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story