அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் ஈரோட்டில் ஜி.கே.வாசன் பேட்டி


அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்  ஈரோட்டில் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 20 Oct 2023 1:58 AM IST (Updated: 20 Oct 2023 1:59 AM IST)
t-max-icont-min-icon

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று ஈரோட்டில் ஜி.கே.வாசன் பேட்டி அளித்தாா்.

ஈரோடு

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று ஈரோட்டில் அளித்த பேட்டியில் ஜி.கே.வாசன் கூறினார்.

மக்கள் ஏமாற்றம்

ஈரோட்டில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கி பேசினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் தமிழக மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரசு ஊழியர்கள் உள்பட பலரும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் போராடுகின்றனர். அவர்கள் மீது தடியடி நடத்துவதும், பொய் வழக்கு போடுவதும் வேதனை அளிக்கிறது. தி.மு.க. அரசு தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

வரி உயர்வு

வீட்டு வரி, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவை மக்களை பாதித்துள்ளது. வரி உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 சதவீத வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டதாக கூறுவது, வாக்காளர்களை ஏமாற்றும் செயலாகும். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. இந்திய கடற்படை ரோந்து சென்று, கடல் கொள்ளையில் ஈடுபடுவோரை தடுக்க வேண்டும். பட்டாசு வெடி விபத்து நடக்காமல் இருக்க அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிரிகளை வீழ்த்துவோம்

கல்லூரி மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும். பாரபட்சமின்றி, மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்க வேண்டும். மத்தியில் பா.ஜனதா மற்றும் மாநிலத்தில் அ.தி.மு.க.வின் நலம் விரும்பியாக செயல்படுகிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து தொண்டர்களின் மனநிலையை அறிந்து, எதிரிகளை வீழ்த்துவோம்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா, செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story