விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்


விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
x

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர்

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகை திட்டங்கள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி உதவித்தொகை அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) வழங்கப்படுகிறது.

பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தின்படி அதிகபட்சமாக ரூ.12 லட்சம் வரையும், வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரையும் என 3 வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டங்களில் சேர்ந்து பயனடைய விரும்பும் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பிலும், சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியாவின் சார்பிலும் பங்கேற்று பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுச் சங்கங்களால் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றவர்கள் மட்டுமே www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக வருகிற 20-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு

தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர், வீரங்கனைகளுக்கு விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை அவர்கள் விளையாட்டு பயிற்சிகளுக்கான செலவினங்களை திரும்பப்பெற்றிடும் வகையில் உதவித்தொகை வழங்கப்படும்.

பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான வின்ணப்பங்கள் இதற்கென அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு மூலம் ஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர்.

கடந்த 30.11.2022 முதல் 22.12.2022 வரை ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பெற்ற பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளின் வெற்றி விவரங்களை ஏற்கனவே உள்ள தங்களுடைய பதிவு கணக்கு மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story