விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 3 வகை திட்டங்களின் கீழ் சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தில் அதிகபட்சம் 5 நபர்களுக்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் ரூ.25 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகள் உள்பட 50 நபர்களுக்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும்.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 1.12.2022 அன்று 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டிகளில் தனிநபர் விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்று இருக்க வேண்டும். அதேபோல் வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 பேருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு 1.12.2022 அன்று 20 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றவர்களாக இருக்க வேண்டும்.
இந்த 3 திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதியான நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.t.gov.in மூலம் வருகிற 15-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும் விவரங்களுக்கு www.sdat.t.gov.in என்று இணையதளம் மற்றும் ஆடுகளம் தகவல் மையத்தினை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.