கோத்தகிரி காந்தி மைதானத்தில் புதர்சூழ்ந்த தடுப்பு வேலிகள்-சீரமைக்க விளையாட்டு வீரர்கள் கோரிக்கை


கோத்தகிரி காந்தி மைதானத்தில்  புதர்சூழ்ந்த தடுப்பு வேலிகள்-சீரமைக்க விளையாட்டு வீரர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 Sept 2023 12:30 AM IST (Updated: 14 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் உள்ள காந்தி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகள் பழுதடைந்து சரிந்து விழுந்து கிடப்பதால் அவற்றைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் உள்ள காந்தி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகள் பழுதடைந்து சரிந்து விழுந்து கிடப்பதால் அவற்றைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காந்தி மைதானம்

கோத்தகிரி நகரின் மையப் பகுதியில், புகழ்பெற்ற காந்தி மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் பயிற்சிபெற்ற விளையாட்டு வீரர்களில் பலர் தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருவதுடன், அரசு மற்றும் தனியார் துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த மைதானத்தில் ஆண்டு முழுவதும் கால்பந்து, வாலிபால், கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் விளையாட்டு பயிற்சி பெற்று வருவதுடன், ஏராளமான பொதுமக்கள் இந்த மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

பராமரிப்பு இல்லை

இந்த மைதானம் கோத்தகிரி பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் பல வருடங்களுக்கு முன் மைதானத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் மைதானம் ஒப்படைக்கப்பட்டது. அதற்குப்பின் காந்தி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை தனியார் நடத்துவதெனில் ஒரு நாளைக்கு 1,250 ரூபாய் கட்டணமும், பிற விளையாட்டுகளுக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் என கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. வருடம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற்று அதன் மூலம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு கணிசமான வருவாய் கிடைத்து வந்தாலும், மைதானத்தை உரிய முறையில் பராமரிப்பது இல்லை என விளையாட்டு வீரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

புதர் சூழ்ந்து...

மேலும் இந்த மைதானத்தில் நேரு பூங்காவை ஒட்டியுள்ள பகுதியில் இருந்து புயல் நிவாரண கூடம் வரை, போட்டிகள் நடைபெறும்போது பந்து மைதானத்தை விட்டு வெளியே செல்லாமல் இருக்க சுமார் 20 அடி உயரத்திற்கு பாதுகாப்பு கம்பி வேலிகள் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டன. ஆனால் அந்த கம்பி வேலிகள் அனைத்தும் சரிந்து விழுந்து புதர் செடிகள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் போட்டிகள் நடைபெறும் போதும், விளையாட்டு வீரர்கள் பயிற்சிகள் மேற்கொள்ளும் போதும் பந்து மைதானத்தை விட்டு வெளியே செல்வதால் அவர்கள் சிரமத்துடன் பயிற்சி மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள் மற்றும் கால்நடைகள் மைதானத்திற்குள் நடமாடி வருவதால் காலை நேரத்தில் நடை பயிற்சிக்கு செல்பவர்கள் அச்சத்துடன் பயிற்சி மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மைதானத்தை சிறப்பாக பராமரிப்பதுடன், பாதுகாப்பு கம்பி வேலிகளையும் புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விளையாட்டு வீரர்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story