பள்ளி மாணவர்களுக்கு தடகள போட்டிகள்
அரியலூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
தடகள போட்டிகள்
குடியரசு தின விழாவையாட்டி பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரியலூர் மாவட்ட அளவிலான 14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டிகள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. போட்டிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, க.ேசா.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம், தடை தாண்டும் ஓட்டம், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், கோலூன்றி தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றது.
பதக்கம், சான்றிதழ்
ஏற்கனவே அரியலூர், திருமானூர், தா.பழூர், ஜெயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய குறு வட்ட அளவில் நடத்தப்பட்ட தடகள போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்தவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தங்கப்பதக்கமும், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெண்கல பதக்கமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்தவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடவுள்ளனர். மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படாத மற்றும் மீதமுள்ள தடகள போட்டிகளும் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியினர் செய்திருந்தனர். இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயா (இடைநிலை), சுவாமி முத்தழகன் (தொடக்கக் கல்வி), அரியலூர் ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.