கண்டாச்சிபுரத்தில்ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து முதியவரிடம் ரூ.20 ஆயிரம் அபேஸ்பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து டிப்-டாப் ஆசாமி கைவரிசை
கண்டாச்சிபுரத்தில் பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து முதியவரிடம் ரூ.20 ஆயிரம் அபேஸ் செய்த டிப்-டாப் ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருக்கோவிலூர்
கண்டாச்சிபுரம் பழைய கருவாச்சி தட்டான்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் காசிவேல் (வயது 64). இவர் சம்பவத்தன்று கண்டாச்சிமங்கலத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு வந்த டிப்-டாப் ஆசாமி, காசிவேலிடம் பணம் எடுக்க உதவி செய்வதாக கூறி, அவரிடம் இருந்த ஏ.டி.எம் கார்டை வாங்கி, அதற்கான ரகசிய எண்ணையும் கேட்டு தெரிந்து கொண்டு ரூ.1500-ஐ எடுத்துக் கொடுத்தார். அதன்பிறகு டிப்-டாப் ஆசாமியிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை பெற்றுக் கொண்ட காசிவேல் வீட்டுக்கு சென்ற சில மணி நேரங்களில் அவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதில் கறம்பக்குடி என்ற ஊரில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து காசிவேல் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.20 ஆயிரம் எடுத்திருப்பது தெரியவந்தது. அதன்பிறகு தான் டிப்-டாப் ஆசாமி தன்னிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுத்து தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரத்தை அபேஸ் செய்திருப்பது காசிவேலுவுக்கு தெரியவந்தது. இதுகுறித்து காசிவேல் கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குருபரன் வழக்குப்பதிவு செய்து டிப்-டாப் ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார். ஏ.டி.எம். மையத்துக்கு வந்த முதியவரிடம் பணம் எடுத்து கொடுக்க உதவி செய்வது போல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து டிப்-டாப் ஆசாமி பணத்தை அபேஸ் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.