ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
பழனி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அழகாபுரி கொழுமம் சாலையில், தனியார் நிறுவன ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு அழகாபுரி மற்றும் அதன் வட்டாரத்தை சேர்ந்த மக்கள் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க பொதுமக்கள் வந்தனர். அப்போது அங்குள்ள ஏ.டி.எம். எந்திரம் சேதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கொள்ளையடிக்க முயற்சி
இதுகுறித்து பழனி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் பயங்கரமாக உடைக்கப்பட்டிருந்தது.மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவும் சேதப்படுத்தப்பட்டு உடைந்த நிலையில் கிடந்தது. ஆனால் எந்திரத்தில் பணம் வைக்கப்பட்ட பகுதி உடையவில்லை. இதனால் அதில் இருந்த பணம் தப்பியது.
இந்த ஏ.டி.எம். மையத்தில் காவலாளி இல்லை. எனவே ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு ஏ.டி.எம்-க்குள் புகுந்து கடப்பாரை போன்ற ஆயுதத்தால் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
உலா வந்த மர்ம நபர்
இதற்கிடையே அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஏ.டி.எம். மையம் உள்ள பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் உலா வருவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் அங்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்து பார்வையிட்டனர். மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.