ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ரூ.15 லட்சம் தப்பியது


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ரூ.15 லட்சம் தப்பியது
x

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.15 லட்சம் தப்பியது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் திங்கள்சந்தையில் இருந்து இரணியல் செல்லும் சாலையில் ரவுண்டானா அருகே ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று காலை இங்குள்ள ஏ.டி.எம். எந்திரம் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

இதை கவனித்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

கொள்ளை முயற்சி

அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பக்கம் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது. இரவில் யாரோ மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு புகுந்து பணத்தை கொள்ளை அடிக்கும் எண்ணத்தில் எந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனர்.

இதற்காக எந்திரத்தின் முன் பக்கத்தை உடைத்துவிட்டு பணம் இருக்கும் பகுதியை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் உடைக்க முடியவில்லை. எனவே முயற்சியை கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் அதில் இருந்த ரூ.15 லட்சம் தப்பியது.

இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் இதுதொடர்பாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story