ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி


ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 10 April 2023 6:45 PM GMT (Updated: 10 April 2023 6:45 PM GMT)

நாகையில், ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரையால் உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர் கொள்ளையடிக்க முயன்றார். அவரது முயற்சி பலன் அளிக்காததால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது.

நாகப்பட்டினம்


நாகையில், ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரையால் உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர் கொள்ளையடிக்க முயன்றார். அவரது முயற்சி பலன் அளிக்காததால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது.

ஏ.டி.எம். எந்திரம்

நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் அருகே ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று காலை வழக்கம்போல வங்கி உதவி மேலாளர் மகேஷ் வங்கிக்கு வந்தார். அப்போது ஏ.டி.எம். மையம் திறந்து கிடப்பதையும், உள்ளே எந்திரம் உடைக்கப்பட்டு கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து வெளிப்பாளையம் போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி

அப்போது மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரையால் உடைப்பதும், பணம் எடுக்க முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர்.

மேலும் போலீஸ் மோப்ப நாய் 'துலிப்' சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது ஏ.டி.எம். மையத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது.

லட்சக்கணக்கான பணம் தப்பியது

இந்த கொள்ளை முயற்சி குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தில் வழக்கமாக ரூ.4 லட்சம் இருப்பு வைப்போம். கடந்த 3 நாட்கள் வங்கி விடுமுறை என்பதால் ரூ.7 லட்சம் இருப்பு வைத்தோம். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த மர்ம நபர் பணத்தை எடுக்க முடியாமல் சென்றதால் பல லட்சம் ரூபாய் தப்பியது என்றனர்.

பரபரப்பு

நாகையின் முக்கிய பகுதியில் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story