'யூடியூப்' பார்த்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த 5 பேர் கைது
தேன்கனிக்கோட்டை:-
'யூடியூப்' பார்த்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த 5 பேர் சிக்கினர். தளி அருகே கைவரிசை காட்ட முயன்ற போது அவர்கள் சிக்கினர்.
ஏ.டி.எம். எந்திரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே கர்நாடகா மாநிலத்துக்கு உட்பட்ட ஆனேக்கல் தாலுகா பொம்மசந்திரா அருகே ஸ்ரீராம்புராவில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரத்தை கடந்த 22-ந் தேதி மர்மநபர்கள் கியாஸ் கட்டர் மூலம் உடைத்தனர். இதுகுறித்து ஜிகனி போலிசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு ெசய்தனர். அப்போது 5 பேர் ஒரு ஆட்டோவில் வந்தது தெரிய வந்தது. அந்த ஆட்டோவை பதிவு எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
5 பேர் கைது
அப்போது 5 பேரும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த பகுதியில் தங்கி இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த பாபுல் நோகினயா (23), முகமது ஆசிப் (26), பிஸ்வால் (29), தில்வார் உசேன் லஷ்கர் (21), ஆமின் (21) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய போது, தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த இவர்கள் ஆடம்பரமாக வாழ வங்கி ஏ.டி.எம்.மில் கொள்ளையடிப்பது என திட்டமிட்டனர். 'யூடியூப்'பில் வீடியோ பார்த்து கியாஸ் கட்டர் மூலம் திருட முயன்றதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.