ஈரோட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; அலாரம் ஒலித்ததால் ரூ.10 லட்சம் தப்பியது


ஈரோட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; அலாரம் ஒலித்ததால் ரூ.10 லட்சம் தப்பியது
x

ஈரோட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது அலாரம் ஒலித்ததால் ரூ.10 லட்சம் தப்பியது.

ஈரோடு

ஈரோட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது அலாரம் ஒலித்ததால் ரூ.10 லட்சம் தப்பியது.

ஏ.டி.எம். மையம்

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் சத்தி ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியும், அதன் முன்பு ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பணி முடிந்ததும் ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க வந்த ஒருவர், ஏ.டி.எம். எந்திரம் உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் வங்கியின் மேலாளர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கொள்ளை முயற்சி

பின்னர் கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து பதிவாகி இருந்த மர்ம நபரின் கைரேகைகளையும், அந்த நபர் விட்டு சென்ற தடயங்களையும் சேகரித்தனர். மேலும், மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி சென்று, யாரையும் கவ்வி பிடிக்காமல் திரும்பியது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர், முதலில் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை கம்பியால் அடித்து உடைத்துள்ளார். தொடர்ந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். அப்போது ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த அலாரம் ஒலித்தது. இதனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

ரூ.10 லட்சம் தப்பியது

ஏ.டி.எம். மையத்தில் அலாரம் ஒலித்ததால், எந்திரத்தில் இருந்த ரூ.10 லட்சம் தப்பியதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story