மதுரையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் கைது


மதுரை நரிமேடு பகுதியில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


மதுரை நரிமேடு பகுதியில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஏ.டி.எம். மையம்

மதுரையில் கடந்த சில நாட்களாக ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சி தொடர்ந்து வருகிறது. எனவே ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் இரவு நேரங்களில் ஏ.டி.எம். மையங்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நரிமேடு பகுதியில் அரசு வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம். மையம் பகுதி வழியாக தனிப்படை போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர்.

2 பேர் கைது

அப்போது 2 பேர் சந்தேகப்படும் படியாக அங்கு இருப்பதை கண்டனர். உடனே போலீசார் விரைந்து சென்று அவர்களை பிடித்தனர். பின்னர் ஏ.டி.எம். மையத்தை பார்த்த போது அது உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்களிடம் விசாரித்தபோது சொக்கிக்குளம் அண்ணாநகரைச் சேர்ந்த ஜெயக்குமார்(வயது 47), உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்த் (31) என்பது தெரியவந்தது.

மேலும் 2 பேரும் ஏ.டி.எம். எந்திரத்தை கல்லால் உடைத்து சேதப்படுத்தி அதில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் வேலப்பன் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் உரிய நேரத்தில் 2 பேரையும் பிடித்ததால் ஏ.டி.எம்.எந்திரத்தில் இருந்த சுமார் ரூ.5 லட்சம் தப்பியது.


Related Tags :
Next Story