அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல் பற்றி அண்ணாமலை பேசாதது ஏன்?-சீமான் கேள்வி


அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல் பற்றி அண்ணாமலை பேசாதது ஏன்?-சீமான் கேள்வி
x

அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல் பற்றி அண்ணாமலை பேசாதது ஏன்? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

சிவகங்கை

காரைக்குடி,

அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல் பற்றி அண்ணாமலை பேசாதது ஏன்? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

பேட்டி

காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

இலவசம் என்பது ஏமாற்றுத் திட்டம். விழிப்புணர்வு அற்ற சமூகமாக இருப்பதால் காலம் காலமாக கையேந்தும் நிலை தொடர்கிறது. ஆறுதலால் காயங்கள் ஆறுவதில்லை. தூறல்களால் பயிர்கள் விளைவதில்லை. தேசத்தையே நாசமாக்கிய ஒற்றை சொல் இலவசம் என்ற மாமுனிவர் குன்றக்குடி அடிகளார் அடியொற்றி, இலவசம் பெறவேண்டிய நிலை இல்லாத வகையில் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும்.

நேர்மையானவர்களா?

தி.மு.க.வின் 2 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறும் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மற்ற அமைச்சர்கள் நேர்மையானவர்கள் என ஒத்துக்கொள்கிறாரா? அ.தி.மு.க. அரசு நடைபெற்றபோது அதில் அங்கம் வகித்த அமைச்சர்கள் ஊழலே செய்யவில்லையா? அதுபற்றி அண்ணாமலை பேசாதது ஏன்? நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல உதவியது யார்?

சாமி பற்றி பேசுபவர்கள் பூமி பற்றி கவலைப்படுவதில்லை. சாதி, மதம், சாமி தவிர வேறு எந்தக் கொள்கையும் கோட்பாடுகளும் பாரதீய ஜனதாவுக்கு இல்லை. எனவே அவர்கள் ஊழல்களை பற்றியும் மக்களின் உரிமைகளைப் பற்றியும் பேசுவது நியாயமில்லை.

அரசு பள்ளிகளில்...

கேரளாவில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. டெல்லியில் அரசு பள்ளிகள் 5 நட்சத்திர விடுதிகள் போல் மாற்றப்பட்டுவிட்டன. இங்கு அரசு பள்ளிகள் தரம் உயர்த்தினால் தனியார் பள்ளிகளின் வியாபாரம் படுத்துவிடும். எனவே அரசு பள்ளிகளின் தரம் உயர்த்துதல் பற்றிய சிந்தனையே எழுவதில்லை.

ஜீயர்களும், தீட்சிதர்களும் அமைச்சர்களை நடமாட முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு துணிவில்லை. மக்களுக்கான உரிமைகளை கேட்பது, பேசுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி நாங்கள்தான். மாற்றம் எளிதில் வந்துவிடாது. பொறுமை வேண்டும். மின்சாரம் இல்லாத இரவுகளில் மக்கள் மெழுகுவர்த்திகளை தேடி வருவார்கள். அதுபோல அநீதி அதிகரிக்கும்போது மக்கள் நல்லவர்களை தேடுவார்கள். அப்போது நாங்கள் மட்டுமே அங்கு இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

கட்சியில் இணையும் விழா

தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சியில் இருந்து விலகியவர்கள், நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா காரைக்குடியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி சீமான் பேசியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகள் தேர்தல் நேரத்தில் ரூ.5 ஆயிரம் கோடி, ரூ.10 ஆயிரம் கோடி வைத்து அதை மக்களிடம் கொடுத்து ஓட்டு பெற்று ஆட்சியை பிடிக்கின்றன. ஆனால் நாம் தமிழர் கட்சி அப்படி அல்ல. மக்களிடம் நேர்மையை விளக்கி ஓட்டுக்களை கடந்த தேர்தலில் பெற்றுள்ளோம். கடந்த தேர்தலில் 30 லட்சம் ஓட்டுக்களை பெற்றுள்ளோம். இதே ஓட்டுக்கள் இன்னும் 3 மடங்கு அதிகரித்தால் நாம் தமிழர் கட்சிதான் அடுத்து ஆட்சி அமைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெற்றிக்குமரன், இராம.கோட்டைக்குமார், ஹீமாயுன்கபீர், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கரு.சாயல்ராம், தென் சென்னை மண்டல செயலாளர் புகழேந்தி, மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதாநம்பி, மாநில மருத்துவ அணி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரபாகரன், கொள்கை பரப்பு செயலாளர் ராவணன் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story