மாணவர் உள்பட 3 பேர் மீது தாக்குதல்
ஏர்வாடியில் மாணவர் உள்பட 3 பேர் தாக்கப்பட்டனர்
ஏர்வாடி:
ஏர்வாடி வடக்கு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஹபீப் ரகுமான் மகன் நாகூர் மீரா சாகிப் (20). இவர் ஒரு கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர், தனது நண்பரான கட்டளை தெருவை சேர்ந்த செய்யது யாசின் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது, 4-ம் தெருவை சேர்ந்த ஜன்னத்துல் இப்ராஹிம் என்பவர் பாதையில் இடையூறாக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் அமர்ந்திருந்தார். இதைப்பார்த்த நாகூர் மீரா சாகிப், அவரிடம் ஓரமாக நிற்க வேண்டியது தானே என்று கூறி விட்டு சென்று விட்டார்.
அதன் பின்னர் நாகூர் மீரா சாகிப் தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜன்னத்துல் இப்ராஹிம், நாகூர் மீரா சாகிப்பை அவதூறாக பேசினார். மேலும் அவரையும், செய்யது யாசினையும் பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வந்த புதுக்குடி மேலத்தெருவை சேர்ந்த தமீம் அன்சாரியையும் தாக்கி விட்டு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த 3 பேரும் ஏர்வாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜன்னத்துல் இப்ராஹிமை தேடி வருகின்றனர்.