மொரப்பூரில் கார் டிரைவர் மீது தாக்குதல்: சேலம் சிறை வார்டர் பணி இடைநீக்கம்


மொரப்பூரில் கார் டிரைவர் மீது தாக்குதல்: சேலம் சிறை வார்டர் பணி இடைநீக்கம்
x

மொரப்பூரில் கார் டிரைவரை தாக்கிய சேலம் சிறை வார்டரை பணி இடைநீக்கம் செய்து கூடுதல் கண்காணிப்பாளர் வினோத் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

சேலம்

சிறை வார்டர்

தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்த மாது மகன் மணிவேலன் (வயது 28). இவர் கடந்த 2017-ம் ஆண்டு 2-ம் நிலை காவலராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் வார்டராக பணியில் சேர்ந்தார். கடந்த 22-ந்தேதி விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்று உள்ளார்.

சம்பவத்தன்று இவரும், இவருடைய நண்பர் சேதுபதி ஆகிய 2 பேரும் மொரப்பூர் மேம்பாலத்தின் அடியில் நின்று கொண்டு இருந்தனர். அங்கு மொரப்பூர் சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த கார் டிரைவர் சிங்காரம் என்பவர் வந்து உள்ளார்.

அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சிங்காரத்திற்கு காயம் ஏற்பட்டது. அவர் மொரப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

பணி இடைநீக்கம்

இது குறித்து சிங்காரம் மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறை வார்டர் மணிவேலனை கைது செய்தனர். தலைமறைவான சேதுபதியை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் சிறை வார்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து மொரப்பூர் போலீசார் சேலம் மத்திய சிறைக்கு கடிதம் அனுப்பினர். இதையடுத்து வார்டர் மணிவேலனை பணி இடைநீக்கம் செய்து, சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வினோத் நடவடிக்கை எடுத்து உள்ளார்.


Next Story