ஜெபக்கூட்டத்திற்கு வேனில் வந்த கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்
தூத்துக்குடியில் இருந்து சங்கராபுரத்திற்கு ஜெபக்கூட்டத்திற்கு வேனில் வந்த கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சங்கராபுரம்
கள்ளக்குறிச்சி அழகர் நகரை சேர்ந்தவர் சந்தானம் மகன் ஆரோக்கியதாஸ் (வயது 40). இவரது நண்பரான தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரை சேர்ந்த ஏசாக்ஐசக் நவமணி என்பவர் கிறிஸ்தவர்கள் 20 பேருடன் நேற்று சங்கராபுரம் அருகே விரியூர் கிராமத்தில் உள்ள ஒருவரது வீட்டிற்கு ஜெபக்கூட்டத்திற்காக வேனில் வந்து கொண்டிருந்தனர்.
சங்கராபுரம் அருகே பரமனந்தம் பிரிவு சாலை அருகில் வந்த போது தச்சூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் வேனை வழிமறித்தனர். பின்னர் அவர்கள், வேனில் இருந்தவர்களை ஆபாசமாக திட்டி பெண்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஆத்திரம் தீராத அவர்கள், வேனின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்து சென்றனா்.
இதுகுறித்து ஆரோக்கியதாஸ், சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஜெபக்கூட்டத்திற்காக வந்த கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.