ஆண் நண்பருடன் பேசிய கல்லூரி மாணவி மீது தாக்குதல்
ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை தாக்கிய தனியார் நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை தாக்கிய தனியார் நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தனியார் நிறுவன ஊழியர்
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, கோவையில் உள்ள விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு செட்டிபாளையத்தை சேர்ந்த மனோஜ் குமார் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. மனோஜ்குமார் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இடையேயான நட்பு நாளடைவில் அதிகமானது.இந்த நிலையில் மனோஜ்குமார் நடவடிக்கை பிடிக்காததால் மாணவி அவருடன் பழகுவதையும், பேசுவதையும் தவிர்த்து வந்தார். இதன் காரணமாக மனோஜ் குமார் அந்த மாணவி மீது கோபத்தில் இருந்துள்ளார்.
கல்லூரி மாணவி மீது தாக்குதல்
சம்பவத்தன்று கல்லூரி மாணவி உப்பிலிபாளையம் காமராஜர் ரோட்டில் தனது ஆண் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மனோஜ் குமார், ஆண் நண்பனுடன் பேசிய மாணவியை கண்டித்து தனது மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு தெரிவித்தார். அதற்கு அவர் ஏற மறுத்து கல்லூரிக்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ்குமார் தகாத வார்த்தைகளால் பேசி மாணவியை அடித்து உதைத்துள்ளார். தடுக்க முயன்ற ஆண் நண்பரை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றார்.
இது குறித்து மாணவி சிங்காநல்லூர் ேபாலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தாக்குதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் மனோஜ் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.