பேச மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்


பேச மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் தன்னுடன் பேச மறுத்ததால் ஆத்திரத்தில் கல்லூரி மாணவியை நடுரோட்டில் வைத்து தாக்கி விட்டு தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் தன்னுடன் பேச மறுத்ததால் ஆத்திரத்தில் கல்லூரி மாணவியை நடுரோட்டில் வைத்து தாக்கி விட்டு தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கல்லூரி மாணவி

கோவை சிங்காநல்லூரை சேர்ந்த 23 வயது மாணவி கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பள்ளி படிக்கும்போதே தன்னுடன் படித்து வந்த கவுரி சங்கர் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இதனால் அந்த நபருடன் தொடர்ந்து அவர் பேசி வந்தார்.இந்த நிலையில், திடீரென்று கவுரி சங்கரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் அந்த மாணவி, அவருடன் பேசுவதை தவிர்த்து உள்ளார். அத்துடன் மாணவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டால் அவர் அதை எடுத்து பேசுவது இல்லை என்று கூறப்படுகிறது.

நடந்து சென்றார்

இதனால் அந்த மாணவி மீது கவுரி சங்கருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாணவி, கல்லூரி முடிந்து ராமநாதபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் வழியாக தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் கவுரிசங்கர், அவருடைய நண்பருடன் வந்தார்.

பின்னர் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கிய கவுரிசங்கர், ஏன் என்னிடம் பேசுவது இல்லை என்று கேட்டு உள்ளார். அதற்கு அந்த மாணவி, உன்னிடம் பேசவோ, பழகவோ எனக்கு பிடிக்கவில்லை. எனவே என்னிடம் பேசாதே, எனக்கு போன் செய்து தொந்தரவு செய்யாதே என்று கூறியதாக தெரிகிறது.

மாணவி மீது தாக்குதல்

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கவுரிசங்கர் நடுரோடு என்று கூட பார்க்காமல் திடீரென்று அந்த மாணவியை தாக்கியதுடன் என்னிடம் பேசாமல், வேறு யாரிடமாவது பேசியது தெரியவந்தால், உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இதுகுறித்து கல்லூரி மாணவி ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கவுரிசங்கர், அவருடைய நண்பர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story