செல்போன் கடைக்குள் புகுந்து ஊழியர் மீது தாக்குதல்
செல்போன் கடைக்குள் புகுந்து ஊழியர் மீது தாக்குதல்
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் ஒரு செல்போன் பழுது நீக்கும் கடை இயங்கி வருகிறது. இந்த செல்போன் கடைக்கு சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் வாலிபர் ஒருவர் செல்போனை பழுது நீக்க கொடுத்துள்ளார். அப்போது கடை ஊழியர் ஹரி ராஜாளி செல்போனை பார்த்து விட்டு பழுது நீக்க அதிக செலவு ஆகும் என்றும், தற்போது சரி செய்து கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர் குறைந்த விலையில் மாற்றி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு கடை ஊழியர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் செல்போன் கடை ஊழியரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது கடை உரிமையாளர் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை செய்து அனுப்பி வைத்தார். அங்கிருந்து சென்ற அந்த வாலிபர் சிறிது நேரம் கழித்து தனது நண்பருடன் வந்து மீண்டும் அந்த செல்போன் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றியதில் கடைக்குள் புகுந்து, ஹரி ராஜாளியை ஆபாசமாக திட்டியதுடன் அங்கிருந்த பிளாஸ்டிக் இருக்கையை தூக்கி எரிந்து தாக்கி உள்ளனர். இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் ஹரி ராஜாளி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.