மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர் மீது தாக்குதல்


மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர் மீது தாக்குதல்
x

மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

திருச்சி

மண்ணச்சநல்லூர் தளுதாளப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 59). இவர் ஸ்ரீரங்கம் சரஸ்வதி கார்டனில் உள்ள அம்மா மண்டபம் பிரிவு உதவி மின்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 1-ந்தேதி ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரம் நவநீதா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சரஸ்வதி என்பவர் வீட்டிற்கு சென்று மின் கட்டணம் செலுத்தவில்லை, எனவே மின்கட்டணத்தை உடனே செலுத்துமாறு அறிவுறுத்தினார். ஆனாலும் அவர்கள் நேற்று வரை மின்கட்டணம் செலுத்தவில்லை. இதையடுத்து கணேசன் மீண்டும் நேற்று சரஸ்வதி வீட்டிற்கு சென்று மின் கட்டணம் செலுத்தாதால் மின் துண்டிப்பு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கணேசன் அலுவலகத்தில் பணியில் இருக்கும் போது அங்கு வந்த விவேக் (32) என்பவர் எங்கள் வீட்டில் எப்படி நீ மின் துண்டிப்பு செய்யலாம் என கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி அவரது கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதையடுத்து அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் கேட்டதற்கு அவர்களையும் தகாத வார்த்தையில் திட்டி உள்ளார். இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செ்ய்து விவேக்கை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் வெளியிட்ட அறிக்கையில், மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து மின்ஊழியர் கணேசனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நாளை (புதன்கிழமை) ஸ்ரீரங்கம் ராகவேந்திரா ஆர்ச் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story