திருக்கோவிலூர் அருகே பரபரப்பு; சார்பதிவாளர் அலுவலகத்தில் விவசாயி மீது இரும்பு கம்பியால் தாக்குதல்- தம்பி கைது; தப்பி ஓடிய மருமகனுக்கு வலைவீச்சு
திருக்கோவிலூர் அருகே சார்பதிவாளர் அ லுவலகத்தில் விவசாயி மீது இரும்பு கம்பியால் தாக்கிய தம்பி கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய மருமகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 57). விவசாயி. இவரது மகள் ஆனந்தி. இவருக்கும் அதேபகுதியை சோ்ந்த ஏழுமலை(36) என்பவருக்கும் இடையே கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், ஒரு குழந்தை பிறந்த நிலையில், ஆனந்தி இறந்து விட்டார். தற்போது கார்த்திகா(17) என்கிற மகள் உள்ளார்.
இதன் பின்னர், ஏழுமலை கஸ்தூரி என்கிற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். சம்பவத்தன்று ஏழுமலை தனக்கு சொந்தமான வீட்டுமனையை விற்பனை செய்வதற்காக மணலூர்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார்.
இரும்பு கம்பியால் தாக்குதல்
இதுபற்றி அறிந்த மாமனார் சுப்பிரமணியன், தனது பேத்தி கார்த்திகாவுடன் அங்கு சென்றார். அங்கு ஏழுமலையை பார்த்து சுப்பிரமணியன் திருமண வயதில் ஒரு மகள் இருக்கும்போது இப்படி வீட்டுமனையை விற்பது நியாயமா என கேட்டிருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஏழுமலை மற்றும் சுப்பிரமணியனின் தம்பி சக்திவேல் ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் சுப்பிரணியனை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் மணலூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை கைது செய்தனர். தப்பி ஓடிய ஏழுமலையை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.