ஜவுளி தொழில் போட்டியில்வியாபாரி மீது சரமாரி தாக்குதல்


ஜவுளி தொழில் போட்டியில்வியாபாரி மீது சரமாரி தாக்குதல்
x

சங்ககிரி அருகே ஜவுளி தொழில் போட்டியில் வியாபாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக கூட்டாளிகள் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்

சங்ககிரி

ஜவுளி வியாபாரம்

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே கனககிரி அம்மன் கோவில் காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 33). இவர், மகுடஞ்சாவடி, இளம்பிள்ளை பகுதியில் தறி நெசவு சேலைகளை வாங்கி வியாபாரம் செய்து வந்ததாக தெரிகிறது.

அவருடன் இளம்பிள்ளை கறிக்கடை பகுதியை சேர்ந்த ஓம் பிரகாஷ், ராசி கவுண்டனூரை சேர்ந்த சந்தோஷ், ஊஞ்சகாட்டை சேர்ந்த தேவராஜ், மகுடஞ்சாவடியை சேர்ந்த சபரிநாதன் ஆகியோர் கூட்டாக சேலை வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

தாக்குதல்

இதற்கிடையே ஜெயச்சந்திரன் இளம்பிள்ளை சென்று விட்டு எடப்பாடி வழியாக ஊருக்கு வந்தார். வைகுந்தம் டோல்கேட் அருகில் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அவரை செல்போனில் தொடர்பு கொண்ட ஓம் பிரகாஷ், அங்குள்ள பஞ்சர் கடை அருகில் வரும்படி அழைத்தார். ஜெயச்சந்திரனும், தொழில் கூட்டாளிதானே அழைக்கிறார் என நினைத்து அங்கு சென்றார்.

அங்கு ஓம்பிரகாஷ், சந்தோஷ், தேவராஜ், சபரிநாதன் உள்பட 6 பேர் ஜெயச்சந்திரனிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது எங்களை விட்டு விட்டு தனியாக தொழில் செய்ய முயற்சி செய்ய கூடாது என்று கூறியதாகவும் தெரிகிறது. அவர்கள் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஜெயச்சந்திரன் சத்தம் போட்டபடியே தப்பி ஓடியுள்ளார்.

6 பேருக்கு வலைவீச்சு

பின்னர் உறவினர் ஒருவர் உதவியுடன் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜெயச்சந்திரன் கூட்டாளிகள் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story