மினி பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்
கீழ்வேளூர் அருகே மினி பஸ் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே செருநல்லூர் மேலத்தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 34). இவர் திருவாரூரில் தனியார் மினி பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 64 மாணலூர் நோக்கி மினி பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை தேவூரை சேர்ந்த மோகன் என்பவர் ஓட்டி வந்தார். மினி பஸ் காக்கழனி காலனி தெரு பகுதியில் வந்த போது, 64 மாணலூர் மேல தெருவை சேர்ந்த வேலாயுதம் மகன் வெள்ளிநாதன் (24) என்பவர் பஸ்சை வழி மறித்து கண்டக்டர் தினேஷ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த அவர், திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தினேஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளிநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.