"அமைச்சர் கார் மீதான தாக்குதல் ஜனநாயகத்துக்கு எதிரான செயல்" -பா.ஜனதாவினருக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் ஆட்சேபம்


அமைச்சர் கார் மீதான தாக்குதல் ஜனநாயகத்துக்கு எதிரான செயல் -பா.ஜனதாவினருக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் ஆட்சேபம்
x

அமைச்சர் கார் மீதான தாக்குதல் ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என்று மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில், பா.ஜனதாவினருக்கு முன்ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

மதுரை

அமைச்சர் கார் மீதான தாக்குதல் ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என்று மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில், பா.ஜனதாவினருக்கு முன்ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் கார் மீது செருப்புவீச்சு

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினார். அப்போது அவரது கார் மீது செருப்பு வீசப்பட்டது. இதுகுறித்து பல்வேறு நபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. பெண்கள் உள்பட சிலர் கைதாகியுள்ளனர். இந்தநிலையில் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள பா.ஜ.க. பிரமுகர்கள் மானகிரி கோகுல் அஜித், விளாங்குடி வேங்கைமாறன், மேல அனுப்பானடி மணிகண்டன் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

திட்டமிட்டு நடக்கவில்லை

இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் நிரஞ்சன் குமார் ஆஜராகி, அமைச்சரின் காரில் செருப்பு வீசிய சம்பவம் எதார்த்தமாக நடந்தது. திட்டமிட்டு நடத்தப்படவில்லை. மனுதாரர்கள் மீது அதிகபட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கக்கூடிய வகையிலான பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளவர்களை கைது செய்யவோ, நீதிமன்ற காவலில் அடைக்கவோ தேவையில்லை. இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த கருத்துகளை வலியுறுத்தி ஏற்கனவே ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டுகள் பல்வேறு தீர்ப்புகளை பிறப்பித்துள்ளன. எனவே மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும், என்று வாதாடினார்.

அரசு தரப்பில் ஆட்சேபம்

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் வாதிடுகையில், "அமைச்சருக்கு எதிரான இந்த தாக்குதல், ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும்.

போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. ஆனால், மனுதாரர்களின் நடவடிக்கை, விளம்பர நோக்கத்தில் உள்ளது. மனுதாரர்கள் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மனுதாரர்கள் தேசியக்கொடியுடன் கூடிய வாகனத்தையும், அரசு பிரதிநிதியையும் அவமானப்படுத்தி உள்ளனர்.

இந்திய நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த நபரின் உடலுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவத்தை அரசு சட்ட விரோதமாக பார்க்கிறது. எனவே மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, முன்ஜாமீன் வழங்கக்கூடாது" என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story