கடைக்குள் புகுந்து ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்
சோலார் நிறுவனத்துக்கு ஆட்கள் அனுப்புவதில் ஏற்பட்ட தகராறில் கடைக்குள் புகுந்து ஊராட்சி மன்ற தலைவர் மீது சரமாரியாக தாக்குதல் நடந்தது. இது தொடர்பாக 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
கமுதி,
சோலார் நிறுவனத்துக்கு ஆட்கள் அனுப்புவதில் ஏற்பட்ட தகராறில் கடைக்குள் புகுந்து ஊராட்சி மன்ற தலைவர் மீது சரமாரியாக தாக்குதல் நடந்தது. இது தொடர்பாக 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
கருத்து வேறுபாடு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பஸ் நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருபவர் பசும்பொன் ராமகிருஷ்ணன். இவர் பசும்பொன் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் பசும்பொன் அருகே மின்சாரம் தயார் செய்து அனுப்பும் சோலார் நிறுவனத்துக்கு கூலி வேலைக்கு தொழிலாளர்களை அனுப்பும் தொழிலும் செய்து வருகிறார்.
சோலார் நிறுவனத்துக்கு வேலை செய்யும் தொழிலாளர்களை அனுப்புவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வேறு நபர்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.
தாக்குதல்
இந்நிலையில் இவர் கடையில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக வெளியே வந்த போது கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜெகன், அஜித், சிவா முனியசாமி, வில்வமூர்த்தி, உள்பட 7 பேர் வழிமறித்தனர். பின்னர் அவரை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் கை மற்றும் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு கமுதி அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ராமகிருஷ்ணன் கமுதி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் கமுதி துணை சூப்பிரண்டு மணிகண்டன், போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன், சப்-இன்ஸ்பெக்டர் அருண் பாண்டியன் உள்பட போலீசார் ஜெகன், அஜித் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.