கஞ்சா வியாபாரியை பிடித்த போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்: 19 பேர் மீது வழக்கு


கஞ்சா வியாபாரியை பிடித்த போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்: 19 பேர் மீது வழக்கு
x

தேனியில் கஞ்சா வியாபாரியை பிடித்த போலீஸ் ஏட்டுவை தாக்கிய 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி,

தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையம் அருகில் புறவழிச்சாலையில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் ஏட்டு ஸ்டாலின் நேற்று முன்தினம் அங்கு ரோந்து சென்றார்.

அப்போது 2 பேர் அங்கு கஞ்சா விற்றுக்கொண்டு இருந்தனர். கஞ்சா விற்ற 2 பேரையும் போலீஸ் ஏட்டு ஸ்டாலின் பிடித்து, ஒரு ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல முயன்றார். அப்போது அங்கு 17 பேர் கும்பலாக வந்தனர்.

ஏட்டு மீது தாக்குதல்

அவர்கள் ஆட்டோவை வழிமறித்து கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய விடாமல் தடுத்தனர். மேலும் அவர்கள் போலீஸ் ஏட்டுவை கம்பால் தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் கஞ்சா வியாபாரிகள் இருவரையும் அவர்கள் மீட்டு சென்றனர்.

இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் ஏட்டு ஸ்டாலின் புகார் செய்தார். அதன்பேரில் கஞ்சா விற்ற அரண்மனைப்புதூரை சேர்ந்த போல்ட் என்ற யோவான், வீரமுத்துக்குமார், போலீஸ் ஏட்டுவை தாக்கிவிட்டு அவர்களை மீட்டு சென்றதாக அரண்மனைப்புதூரை சேர்ந்த அழகுராணி, பாண்டி உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் அழகுராணி என்பவர் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தேனி மாவட்ட தலைவர் ஆவார்.


Next Story