அரசு பஸ்சை மறித்து போலீஸ்காரர் மீது தாக்குதல்-2 வாலிபர்களுக்கு வலைவீச்சு


அரசு பஸ்சை மறித்து போலீஸ்காரர் மீது தாக்குதல்-2 வாலிபர்களுக்கு வலைவீச்சு
x

சேலத்தில் அரசு பஸ்சை மறித்து போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்

ஆயுதப்படை போலீஸ்காரர்

மேச்சேரி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 35). இவர் சேலம் மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து மேச்சேரிக்கு செல்வதற்காக சேலம் புதிய பஸ்நிலையத்துக்கு வந்தார். அங்கு சீருடை இன்றி சாதாரண உடையில் கிருஷ்ணமூர்த்தி பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த அரசு பஸ்சில் அவர் ஏற முயன்றார். அந்த நேரத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் செல்போன் பேசியபடி வந்தனர்.

அவர்கள் போலீஸ்காரர் கிருஷ்ணமூர்த்தியிடம் பஸ்சில் பார்த்து ஏறுடா என்று கூறினர். இதற்கு அவர் நீங்கள் செல்போன் பேசாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்லுங்கள் என்றார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

தாக்குதல்

இதற்கிடையில் அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ஆனால் வாலிபர்கள் அந்த பஸ்சை துரத்தி சென்று 5 ரோடு அருகே மறித்தனர். பின்னர் அவர்கள் கிருஷ்ணமூர்த்தியை கடுமையாக தாக்கினர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அந்த வாலிபர்களை எச்சரித்ததுடன் பிடிக்கவும் முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரரை தாக்கிய வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story