நடுரோட்டில் பெண் போலீஸ் மீது தாக்குதல்
சிவகாசியில் தகராறை சமாதானம் செய்த பெண் போலீஸ் மீது தாக்குதல் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகாசி,
சிவகாசியில் தகராறை சமாதானம் செய்த பெண் போலீஸ் மீது தாக்குதல் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருவருக்கும் இடையே தகராறு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ராஜம்மாள். இவர் நேற்று இரவு முருகன் கோவில் அருகில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், எதிரே சைக்கிளில் வந்தவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவருக்கும், சைக்கிளில் வந்தவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை, ஒருவரை தாக்கிக் கொண்டனர்.
பெண் போலீஸ் மீது தாக்குதல்
இதுகுறித்த தகவல் அறிந்த பெண் போலீஸ் ராஜம்மாள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் சமாதானம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபர், பெண் போலீஸ் ராஜம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜம்மாள் தான் தாக்கப்பட்டது குறித்து சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பெண் போலீசை தாக்கியவர் முத்து என்ற வாலிபர் என தெரியவந்துள்ளது. பெண் போலீஸ் தாக்கப்பட்ட சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.