ரியல் எஸ்டேட் மேலாளரை தாக்கி ரூ.82 லட்சம் கொள்ளை


ரியல் எஸ்டேட் மேலாளரை தாக்கி ரூ.82 லட்சம் கொள்ளை
x

ரியல் எஸ்டேட் மேலாளரை தாக்கி ரூ.82 லட்சம் கொள்ளை

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் ரியல் எஸ்டேட் மேலாளரை தாக்கி ரூ.82 லட்சம் கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிய புரோக்கரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ரியல் எஸ்டேட் மேலாளர்

கோவை பீளமேடு விளாங்குறிச்சிரோடு ஜீவா நகரில் ரியல் எஸ்டேட் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கருமத்தம்பட்டி புதூரை சேர்ந்த லியோ மரிய இருதயராஜ் (வயது 53) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அலுவலகத்தில் லியோ மரிய இருதயராஜ் மட்டும் இருந்தார். அப்போது அங்கு நில புரோக்கரான சிங்காநல்லூரை சேர்ந்த ரவிக்குமார் என்கிற கென்னடி (35) அங்கு வந்தார். அவர் அடிக்கடி இந்த அலுவலகத்துக்கு வந்து செல்வார் என்பதால் அவரிடம் லியோ மரிய இருதயராஜ் பேசிக்கொண்டு இருந்தார்.

ரூ.82 லட்சம் கொள்ளை

2 பேரும் நீண்ட நேரம் நிலம் விற்பனை தொடர்பாக பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று கென்னடி தான் மறைத்து வைத்திருந்த ஆக்சா பிளேடை எடுத்து லியோ மரிய இருதயராஜை சரமாரியாக வெட்டினார். இதில் அவருடைய முகம், காது, தோள்பட்டை உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது.

அத்துடன் அவர் அந்த அலுவலகத்தில் இருந்த ரூ.82 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு தான் வந்திருந்த காரில் தப்பிச்சென்றார். இதனால் ரத்த வெள்ளத்தில் வலி தாங்க முடியாமல் லியோ மரிய இருதயராஜ் அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

போலீசார் வலைவீச்சு

பின்னர் அவர்கள் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த லியோ மரிய இருதயராஜை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அத்துடன் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பி ஓடிய கென்னடியை வலைவீசி தேடி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கேரளாவுக்கு விரைவு

கென்னடி இந்த அலுவலகத்துக்கு அடிக்கடி வந்து செல்வார் என்பதால் மேலாளர் அவரிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த அலுவலகத்தில் ஒரு பை இருந்தது. அதற்குள் பணம் இருப்பதை அறிந்த கென்னடி, திடீரென்று இந்த தாக்குதலில் ஈடுபட்டு பணத்தை கொள்ளையடித்துச்சென்று உள்ளார்.

அவரின் சொந்த ஊர் கேரளா ஆகும். எனவே அவர் கேரளாவுக்கு தப்பிச்சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. எனவே அவரை பிடிக்க தனிப்படை கேரளா விரைந்து உள்ளனர். விரைவில் அவரை பிடித்து விடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கோவையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

----


Next Story