கோவில் திருவிழாவில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்
திருச்சுழி அருகே கோவில் திருவிழாவில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு மீது தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரியாபட்டி
திருச்சுழி அருகே கோவில் திருவிழாவில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு மீது தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில் திருவிழா
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கீழ்க்குடி கிராமத்தில் உலகநாயகி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது.
அங்கு பரளச்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம், ஏட்டு ராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது பூலாங்காலை சேர்ந்த 17 வயது வாலிபருக்கும், விழா நடத்தியவர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பூலாங்காலை சேர்ந்த சேக் அப்துல்லா என்பவரும் சேர்ந்து விழா நடத்தியர்களுடன் தகராறு செய்தார்.
2 பேர் கைது
இந்த தகராறு முற்றி மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த ஏட்டு ராஜ், பிரச்சினை செய்தவர்களை சத்தம் போட்டு சமரசமாக செல்லுமாறு எச்சரித்தார். அப்போது சேக் அப்துல்லா, ஏட்டு ராஜுவை தாக்கினார்.
இதை தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரத்தை 17 வயது வாலிபர் சட்டையை பிடித்து இழுத்து தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து ேசக் அப்துல்லா மற்றும் 17 வயது வாலிபரை பிடிக்க பொதுமக்கள் முற்பட்டனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் சேக் அப்துல்லா மற்றும் 17 வயது வாலிபர் மீது பரளச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.