காதலிக்க மறுத்த இளம்பெண் மீது தாக்குதல்
கோவை காந்திபார்க் பகுதியில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை தாக்கிய ஓட்டல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஆர்.எஸ்.புரம்
கோவை காந்திபார்க் பகுதியில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை தாக்கிய ஓட்டல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஓட்டல் தொழிலாளி
கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(வயது 24). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த ஓட்டல் அருகே உள்ள தையல் கடையில் 21 வயதான இளம்பெண் வேலை செய்து வருகிறார். இவரிடம், நந்தகுமார் அடிக்கடி பேசி வந்தார்.
இதையடுத்து அந்த இளம்பெண்ணை நந்தகுமார் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த தையல் கடைக்கு நந்தகுமார் சென்றார். அப்போது அங்கு அந்த இளம்பெண்ணை தவிர வேறு யாரும் இல்லை.
காதலிக்குமாறு கூறினார்
இதை தொடர்ந்து அவர், அந்த இளம்பெண்ணிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறினார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், நான் உன்னிடம் அண்ணனாகதான் பழகினேன், உன் மீது எனக்கு எவ்வித காதலும் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.
இதை கேட்டதும் நந்தகுமார் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர், நீ என்னை கண்டிப்பாக காதலிக்க வேண்டும், இல்லை என்றால் உன்னை கொன்றுவிடுவேன் என்று கூறி உள்ளார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சரமாரியாக தாக்குதல்
இதில் ஆத்திரம் அடைந்த நந்தகுமார், அந்த இளம்பெண்ணை சரமாரியாக தாக்கியதுடன், என்னை காதலிக்காமல் வேறு யாரையும் காதலித்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றதாக தெரிகிறது.
இது குறித்து அந்த இளம்பெண் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன், நந்தகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.