சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீஸ்காரர்களை தாக்கி, கார் கண்ணாடி உடைப்பு


சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீஸ்காரர்களை தாக்கி, கார் கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 7 Jan 2023 6:45 PM GMT (Updated: 7 Jan 2023 6:46 PM GMT)

தியாகதுருகம் அருகே விசாரணைக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீஸ்காரர்களை தாக்கி கார் கண்ணாடியை உடைத்த தாய், மகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

கொடுமைப்படுத்துவதாக புகார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சித்தால் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் மகன் நவீன் பிரகாஷ்(வயது 25). இவர் தனது மனைவி ராஜேஸ்வரி(25) என்பவருடன் கடந்த நவம்பர் மாதம் பெங்களூருவில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக கெம்பை கவுடா போலீஸ் நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நவீன் பிரகாசை தேடி வந்தனர்.

போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்

இந்தநிலையில் கெம்பை கவுடா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் கொரானே மற்றும் 3 போலீஸ்காரர்கள் நேற்று நவீன் பிரகாசை தேடி சித்தால் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.

அப்போது வீட்டில் இருந்த நவீன் பிரகாஷின் தாய் தையல்நாயகி(43), தங்கை பிரியா(24), தாத்தா அண்ணாமலை(76) ஆகியோர் சேர்ந்து போலீஸ்காரர்களை பணி செய்ய விடாமல் தடுத்து திட்டி, தாக்கியதோடு போலீசார் வந்த வாடகை காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த போலீஸ்காரர் சிக்கன்ன கவுடா கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

3 பேர் கைது

இது குறித்து போலீஸ்காரர் சிக்கன்ன கவுடா கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தையல்நாயகி, பிரியா, அண்ணாமலை ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story