வணிகர்கள் மீதான தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்


வணிகர்கள் மீதான தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
x

வணிகர்கள் மீதான தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

தஞ்சாவூர்

வணிகர்கள் மீதான தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார்.

மளிகை கடைக்காரர் மீது தாக்குதல்

தஞ்சை மாவட்டம் திருப்புறம்பியம் கடைவீதியில், மளிகை கடை நடத்தி வருபவர் முருகேசன் (வயது 48). இவர் கடந்த 14-ந்தேதி கடையில் இருந்த போது அங்கு வந்த 3 நபர்கள் கடனுக்கு பொருட்கள் கேட்டுள்ளனர். ஆனால் கடனுக்கு பொருட்களை தரமறுத்ததால் முருகேசனை, அவர்கள் தாக்கினர்.

இதில், காயமடைந்த முருகேசன், தஞ்சை மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேற்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முற்றுப்புள்ளி

தஞ்சை மாவட்டத்தில் வணிகர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக சுவாமிமலை பகுதிகளில் வியாபாரிகளை அச்சுறுத்தும் விதமாக, தாக்குதல்கள் நடந்து வருகிறது. முருகேசனை தாக்கிய 3 பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற குற்றசம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீது, கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, வருங்காலத்தில் வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்துவதை தடுப்பதோடு, இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்துபவர்களை போலீசார் கண்டும் காணாமல் இல்லாமல், முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், ஒரு தொகுதியில் மட்டுமே தேர்தல் என்பதால், வணிகர் சங்கங்களின் பேரவை எந்த முடிவையும் எடுக்கவில்லை.

மாநில மாநாடு

அத்துடன் வருகிற நாடாளுமன்ற தேர்தலை நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கிறோம். மே மாதம் 5-ந் தேதி ஈரோட்டில் நடைபெறும் 40-வது வணிகர் தின மாநில மாநாட்டில், பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்த உள்ளோம். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நகர்வுகள் வேறு பக்கமாக இருக்கும். ஜி.எஸ்.டி., யில் பல்வேறு இடர்பாடுகளை தினமும் சந்தித்து வருகிறோம். உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மாநில அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதைபயன்படுத்தி, சில தவறான அதிகாரிகள் வியாபாரிகளை அச்சுறுத்தி வருகிறார்கள். வணிக வரி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை கண்டால் வியாபாரிகள் அச்சப்படும் சூழல் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story