போலீசாரை கண்டித்து சாலை மறியல் முயற்சி

போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர் திருட்டு
பொள்ளாச்சி -கோவை ரோடு சேரன் நகரில் தொடர்ந்து அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம், கேமராக்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து பொது மக்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் திருமலைசாமி மற்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சுரேஷ், விழிப்புணர்வு கூட்டம் நடத்தும் போது ஏன் எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கேட்டதாக தெரிகிறது. அதற்கு சப்-இன்ஸ்பெக்டர் திருமலைசாமி உங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.
சாலை மறியல் முயற்சி
இந்த நிலையில் போலீசார் தவறாக பேசியதாக கூறி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதை அறிந்த மகாலிங்கபுரம் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் தி.மு.க. பிரமுகர் சுரேஷ், சப்-இன்ஸ் பெக்டர் திருமலைசாமி ஆகியோர் செல்போனில் பேசும் ஆடியோ நேற்று வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






