போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயற்சி
திருமானூர் அருகே போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.க.வினர் 111 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தில் உள்ள மறவனீஸ்வரர் கோவில் அருகே நூறாண்டுகளுக்கு மேலாக கீழப்பழுவூர் போலீஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. தற்போது கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே புதிய போலீஸ் நிலையம் கட்டப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது. இருந்த போதிலும் பழைய போலீஸ் நிலையத்தை தற்போதும் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மறவனீஸ்வரர் கோவிலில் பூஜை செய்யும் கார்த்திக்குமார் என்பவர் போலீஸ் நிலையம் முன்பு செட் அமைத்து ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த இடத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏன் ஆக்கிரமித்து உள்ளீர்கள், இது எங்களுடைய போலீஸ் நிலையம், இதனை நீங்கள் ஏன் ஆக்கிரமித்து உள்ளீர்கள் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் இது எங்களுடைய சிவன் கோவில் இடம், எனவே நாங்க ஏன் காலி செய்ய வேண்டும் முடியாது எனக்கூறியதாகவும், போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு போலீசாரை வரவழைத்து ஆக்கிரமித்துள்ள பொருட்களை அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்பை மீட்டதாக கூறப்படுகிறது.
111 பேர் கைது
இந்தநிலையில் வருவாய்த்துறையினர் மற்றும் கோவில் அறங்காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்திக்குமாரிடம் இது போலீஸ் நிலையத்துக்கு சொந்தமான இடம் தான் நூறு ஆண்டுகளுக்கு முன்பே மாறிவிட்டது. ஆகையால் நீங்கள் போராட்டம் செய்யாதீர்கள் கலைந்து செல்லுங்கள் என்று சொன்னதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து கார்த்திக்குமார் மற்றும் அவருடைய நண்பர் 3 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து பிறகு அன்றே விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது நேற்று இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் ஆகியோர் தலைமையில் போலீசாரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற 14 பெண்கள் உள்பட 111 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அவர்களை ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.