வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி


வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி
x

துக்க காரியத்துக்கு சென்றிருந்தவரின் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்

நள்ளிரவில்...

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, டி.கீரனூர் முகமது நகரை சேர்ந்தவர் கமருதீனின் மனைவி செல்வகனி என்கிற சையது அம்மாள்(வயது 57). இவர் கடந்த 30-ந் தேதி காலை தனது வீட்டை பூட்டி விட்டு அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, வெள்ளூர் கிராமத்தில் ஒரு துக்க காரியத்துக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சையது அம்மாள் வீட்டில் இருந்து சத்தம் கேட்டு கொண்டிருந்தது.

கையும், களவுமாக பிடிபட்டார்

இந்த சத்தத்தை கேட்ட அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பேரன் உறவு முறையான அஜீஸ் (24) என்பவர் வந்து சந்தேகத்துடன் சையது அம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்து மர்மநபர் ஒருவர் வெளியே ஓடி வந்தார். இதனை கண்ட அஜீஸ் அக்கம், பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் உதவியுடன் அந்த மர்மநபரை கையும், களவுமாக பிடித்தார். பின்னர் இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக மங்களமேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசாரிடம் பொதுமக்கள் மர்மநபரை ஒப்படைத்தனர்.

4 பேர் கைது

இதையடுத்து மர்மநபரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அவர் கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, அம்மாபேட்டை மெயின் ரோட்டை சேர்ந்த அய்யப்பன் மகன் மணிபாலன்(23) என்பது தெரியவந்தது. மேலும் மணிபாலன் பூட்டியிருந்த வீட்டில் திருட தன்னுடன் ஆம்னி வேனில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, வாணியம்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஏழுமலை மகன் முத்துக்குமார் (33), அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்து (35), பைசாம்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராம் (24) ஆகிய 3 பேர் வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் தலைமறைவாக இருந்த அந்த 3 பேரையும் கைது செய்து அழைத்து வந்தனர். அந்த வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story