100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சி

ஆதார் எண் இணைப்பு நடவடிக்கை என்பது 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முயற்சியாகும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டினார்.
ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் சொத்துவரி, மின் கட்டணம், பால்விலை உயர்வை கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலைமை தாங்கி பேசியதாவது:-
ஆதார் இணைப்பு
தமிழகத்தில் சொத்துவரி, மின் கட்டணம், பால்விலை உயர்வை மக்களிடம் எடுத்துக் கூறினால் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற முடியும். அப்படி வெற்றி பெற்று விட்டால் 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. எளிதாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க முடியும்.
அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) பேரூராட்சி பகுதிகளிலும், 13-ந் தேதி ஒன்றிய மற்றும் நகராட்சி பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் நடக்கும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும். அப்போதுதான் மற்ற பேராட்டங்களிலும் நாம் வெற்றிபெற முடியும். ஆதார் எண் இணைப்பு நடவடிக்கை என்பது 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முயற்சியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா, சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், பொன்.சரஸ்வதி, பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் சேகர், கோபிநாத், ராஜா மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.






