பட்டறை உரிமையாளர் உள்பட 3 பேரை கொல்ல முயற்சி: பிடிபட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை


பட்டறை உரிமையாளர் உள்பட 3 பேரை கொல்ல முயற்சி: பிடிபட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை
x

கிரில் பட்டறை உரிமையாளர் உள்பட 3 பேரை கொல்ல முயன்ற வழக்கில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

கிரில் பட்டறை

சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் பள்ளப்பட்டி பகுதியில் கிரில் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பட்டறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேரை ஒரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம கும்பல் வெட்டியது. இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் மர்ம கும்பலை சேர்ந்த ஒருவர் வேறு ஒருவருடன் மோட்டார்சைக்கிளில் வந்தது தெரியவந்தது. அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் அடையாளம் தெரிந்தது. உடனே அவரை போலீசார் பிடித்தனர்.

தேடி வருகிறோம்

இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

ஹெல்மெட் அணிந்து வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கிரில் பட்டறை உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு திரும்பி சென்றனர். பின்னர் அதே வழியில் 2 பேர் மட்டும் ஹெல்மெட் அணிந்து வந்தனர். மற்றொருவர் வேறு ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தது தெரிந்தது. மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் ஹெல்மெட் அணியாமல் இருந்ததால் அடையாளம் தெரிந்தது.

அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்திய போது அவர் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்திய போது சொத்து தகராறில் அவர் கூலிப்படையை ஏவி கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து தாக்குதல் நடத்தியதாக 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் தலைமறைவாக உள்ள கூலிப்படையினரை தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story