வருவாய் ஆய்வாளரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி
மண் திருட்டை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி போலீசார் தீவிர விசாரணை
செஞ்சி
செஞ்சியை அடுத்த மீனம்பூர் ஏரியில் இரவு நேரம் மண் திருட்டு நடப்பதாக செஞ்சி தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் இரவு சம்பவ இடத்துக்கு சென்றனர். இவர்களை கண்டதும் அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் 3 டிராக்டர்களில் மண் அளிக்கொண்டிருந்த மர்ம நபர்கள் உடனே அங்கிருந்து தப்பி சென்றனர்.
அப்போது வருவாய் ஆய்வாளர் கண்ணன் மீது டிராக்டரை ஏற்றி மர்ம நபர்கள் கொல்ல முயன்றனர். இதைப்பார்த்து அருகில் நின்ற கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் வருவாய் ஆய்வாளரை இழுத்து தள்ளியதால் அவர் உயிர் தப்பினார். பின்னர் இது குறித்து செக்கடிகுப்பத்தை சேர்ந்த பொக்லைன் எந்திர உரிமையாளர் தமிழ் குடிமகன், டிராக்டர் டிரைவர் உஸ்மான் உள்பட 6 பேர் மீது கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் அத்தியூர் பகுதியில் மண் திருட்டு நடப்பதாக வருவாய்த்துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து சென்ற போது அதிகாரிகளை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.