ஓடும் ரெயிலில் துப்பாக்கியை காட்டி பயணிகளிடம் கொள்ளை முயற்சி: கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது


ஓடும் ரெயிலில் துப்பாக்கியை காட்டி பயணிகளிடம் கொள்ளை முயற்சி: கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது
x

ஓடும் ரெயிலில் துப்பாக்கியை காட்டி பயணிகளிடம் கெள்ளையடிக்க முயன்ற கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்,

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. வழக்கம்போல் நேற்று காலை 6 மணிக்கு பாலக்காட்டில் இருந்து ரெயில் புறப்பட்டது. காலை 10 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரெயில் நிலையத்தை அடைந்தது. அங்கு ரெயிலில் பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கொடைரோடு ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் அந்த ரெயில் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் இருந்து பயணிகள் இறங்கியதும், சில நிமிடங்களில் அந்த ரெயில் மதுரை நோக்கி மெதுவாக புறப்பட்டது. அப்போது என்ஜினில் இருந்து 2-வது பெட்டியில் இருந்த பயணிகள் திடீரென அலறி கூச்சல் போட்டபடியே இங்கும், அங்கும் ஓடினர்.

இதைப்பார்த்த ரெயில்வே போலீசார் ஒன்றும் புரியாமல் அந்த பெட்டியை நோக்கி ஓடினர். ஆனால் அதற்குள் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார்.

துப்பாக்கியுடன் ஓட்டம்

இதனால் ரெயில் நிலைய நடைமேடையை கடந்து சிறிது தூரம் சென்று ரெயில் நின்றது. அப்போது கையில் துப்பாக்கியுடன் ஒரு வாலிபர் ரெயிலைவிட்டு இறங்கி 3-வது நடைமேடையை நோக்கி ஓடினார். அவரை பின்தொடர்ந்து இறங்கிய மேலும் 3 வாலிபர்கள் தங்களின் உடைமைகளுடன் ஓடினர். அங்கு விரைந்து வந்த கொடைரோடு ரெயில்வே போலீசார் 4 பேரையும் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்களை ரெயில் நிலைய நடைமேடையில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். பிடிபட்டவர்களிடம் இருந்த துப்பாக்கியை வாங்கி சோதனையிட்டனர். அப்போது அது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது. அதன்பிறகு தான் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

கேரளாவை சேர்ந்தவர்கள்

விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அப்துல் ராசிக் (வயது 23), (இவரிடம் தான் பொம்மை துப்பாக்கி இருந்தது), மலப்புரத்தை சேர்ந்த அமீன் செரிப் (19), சித்தாக்கோடியை சேர்ந்த முகமது சின்னான் (20), பாலக்காட்டை சேர்ந்த சப்பல்சா (19) என்பது தெரியவந்தது.

மேலும் அப்துல் ராசிக் தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பொம்மை துப்பாக்கியை எடுத்து பயணிகளிடம் பணம், நகை கேட்டு மிரட்டியுள்ளார். அதனால் தான் அவர்கள் அலறி கூச்சல் போட்டு அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்து திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் கொடைரோடு ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவத்தால் பயங்கரவாதிகள் ரெயிலை கடத்தி விட்டதாக கருதியதாக பயணிகள் கூறினர். இதனால் பெரும் பரபரப்பு உண்டானது.


Next Story