2½ டன் இரும்பு பொருட்களை கடலூரில் விற்க முயற்சி


2½ டன் இரும்பு பொருட்களை கடலூரில் விற்க முயற்சி
x

புதுச்சத்திரம் தனியார் ஆலையில் திருடி கடலூரில் விற்க முயன்ற 2½ டன் இரும்பு பொருட்களை 2 லாரிகளுடன் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கடலூர்

கடலூர்,

கடலூர் அருகே புதுச்சத்திரம் பெரியகுப்பம் கிராமத்தில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. செயல்படாமல் உள்ள இந்த ஆலையில் இரும்பு உள்ளிட்ட தளவாட பொருட்கள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. இங்கு கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்த கண்ணன் (வயது 68) என்பவர் தொழில்முறை ஆலோசகராக உள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து திருடிய இரும்பு பொருட்களை மர்மநபர்கள் 2 லாரிகளில் கடலூர் வெளிசெம்மண்டலத்தில் உள்ள ஒரு பழைய இரும்பு கடைக்கு கொண்டு சென்று விற்பதாக கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இரும்பு பொருட்கள்

அதன் பேரில் அவர் வெளிசெம்மண்டலத்தில் உள்ள இரும்பு கடைக்கு சென்று பார்த்த போது, அங்கு 2 லாரிகளில் இருந்து இரும்பு பொருட்களை மர்மநபர்கள் இறக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் கண்ணனை பார்த்ததும், அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அவர், அந்த இரும்பு பொருட்களை பார்த்த போது, அவை அனைத்தும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து திருடப்பட்ட 2½ டன் இரும்பு பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இரும்பு பொருட்களை திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story