நடராஜர் சிலையை ரூ.8 கோடிக்கு விற்க முயற்சி


நடராஜர் சிலையை ரூ.8 கோடிக்கு விற்க முயற்சி
x

திட்டக்குடி அருகே நடராஜர் சிலையை ரூ.8 கோடிக்கு விற்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர்

திட்டக்குடி,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடராஜர் சிலையை விற்க சிலர் பேரம் பேசுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்படி திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சீனிபாபு, ஆவினங்குடி சப்-இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் ஆவினங்குடி பகுதிக்கு சென்று கண்காணித்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வேப்பூர் அருகே உள்ள காஞ்சிராங்குளத்தை சேர்ந்த தங்கராசு மகன் பெரியசாமி (வயது 42) என்பதும், அவர் சிலையை வாங்குவதற்காக சிலரிடம் பேரம் பேசியதும் தெரியவந்தது.

ரூ.8 கோடி நடராஜர் சிலை

இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆவினங்குடியை சேர்ந்த நல்லமுத்து மகன் ராமர்(33), வேப்பூர் அடுத்த பாசாரை சேர்ந்த கருப்பையா மகன் ராமச்சந்திரன் (33), மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த ராஜசூரியன்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் மகன் சரவணன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தொழுதூர் அதர்நத்தத்தை சேர்ந்த முருகேசன் மகன் வேல்முருகன் என்பவர் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு தன்னிடம் ரூ.8 கோடி மதிப்புள்ள 2 அடி உயரமுள்ள நடராஜர் சிலை இருப்பதாகவும், அதனை விற்று கொடுத்தால் ஒரு பங்கு தருவதாகவும் ராமரிடம் கூறியுள்ளார். உடனே ராமர், அதுபற்றி சரவணனிடம் தெரிவித்துள்ளார். அப்போது சரவணன், வேல்முருகனிடம் சிலையை வாங்குவது போல் அவரை வரவழைத்து, அவரிடம் இருக்கும் சிலையை பிடுங்கிக்கொண்டு விரட்டி விடுவோம் என்றும், பிறகு சிலையை நாம் இருவரும் விற்று பங்கு பிரித்துக் கொள்வோம் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

அதனை நம்பி ராமர், வேல்முருகனை முட்டம் பாலத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி தயாராக இருந்த சரவணன், தனது ஆதரவாளர்கள் சிலருடன் சேர்ந்து வேல்முருகனிடம் இருந்த சிலையை பறித்துக் கொண்டார். பின்னர் அவரை அடித்து அங்கிருந்து விரட்டியுள்ளார்.

ஐம்பொன் சிலையா?

அதன் பிறகு ராமரும், சரவணனும் சேர்ந்து அந்த சிலையை ராமர் வீட்டின் பின்புறம் பன்றி வளர்க்கும் இடத்தின் அருகில் உள்ள குப்பை மேட்டில் மறைத்து வைத்திருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியசாமி, ராமச்சந்திரன் ஆகியோரை சந்தித்து சிலையை விற்பது குறித்து இருவரும் பேரம் பேசியுள்ளனர். அப்போது சரவணன் ரூ.8 கோடி கொடுத்தால், இந்த ஐம்பொன் சிலையை கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். உடனே பெரியசாமி, தனது மனைவியிடம் கேட்டு கூறுவதாக தெரிவித்துவிட்டு, அந்த சிலையை புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை உறவினர்கள் சிலருக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. தற்போது சமூக வலைதளத்தில் வெளியான புகைப்படத்தின் அடிப்படையிலே 4 பேரையும் போலீசார் மடக்கி பிடித்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமர், சரவணன், பெரியசாமி, ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் நடராஜர் சிலையும் பறிமுதல் செய்யப்பட்டது. இது ஐம்பொன்னால் ஆன சிலையா? அல்லது பித்தளை சிலையா? என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னைக்கு அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story