ஓட்டல் உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
வட்டிக்கு வாங்கிய கடனுக்காக டாக்டர் ஒருவர் வீட்டை அபகரித்ததாகக்கூறி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு ஓட்டல் உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.
வட்டிக்கு கடன்
ஆற்காடு அடுத்த காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 32). இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு ஜீவிதா (12), யுவராணி (10) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். சத்தியராஜ் அதேப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதேப்பகுதியை சேர்ந்த கால்நடை டாக்டர் ஒருவரிடம் தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.5 லட்சம் வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் வட்டி கட்டாமல் இருந்து வந்துள்ளார்.
இதற்கிடையே சத்தியராஜ் வீட்டை, டாக்டர் தனது பெயருக்கு மாற்றி விட்டதாக ஆவணங்களை காட்டி சத்தியராஜை குடும்பத்துடன் வெளியேறுமாறு கூறி வந்துள்ளார். முறையாக வட்டியை செலுத்தி விடுவதாக கூறியும் அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று சத்தியராஜை தாக்கி, வீட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேறுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
தீக்குளிக்க முயற்சி
இதனைத் தொடர்ந்து பள்ளியில் படிக்கும் தனது இரு மகள்கள், தாய், தந்தை, பாட்டி, தாத்தா என அனைவருடன் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் படுத்து புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து குடும்பத்தினர் அனைவரின் மீதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக பெட்ரோல் கேனை பிடுங்கியதோடு, அனைவரின் மீதும் தண்ணீர் ஊற்றி பாதுகாப்பாக மீட்டனர்.
தொடர்ந்து ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, தற்கொலைக்கு முயன்ற சத்யராஜிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.