பழ வியாபாரி தீக்குளிக்க முயற்சி


பழ வியாபாரி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பணம் கொடுக்கல்-வாங்கலில் ஏற்பட்ட தகராறில் பழ வியாபாரி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் பழமலைநாதர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜமால் மைதீன் மகன் அசாருதீன், (வயது 24). மினிலாரியில் பழம் வியாபாரம் செய்து வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த ஜெகனபாபு (32) என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.70 ஆயிரம் கடன் பெற்றதோடு, 4 மாதமாக அதற்கான வட்டியை மட்டும் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஜெகன்பாபு கொடுத்த அசல் பணத்தை அசாருதீனிடம் திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அசாருதீனால் பணத்தை கொடுக்க முடியவில்லை. இதனால் ஜெகன்பாபு அசாருதீனின் மினிலாரியை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அசாருதீன் தனது மினிலாரியை மீட்டு தருமாறு விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஜெகன்பாபுவும் தனக்கு தரவேண்டிய பணத்தை அசாருதீன் கொடுக்கவில்லை என கூறி அவர் மீது புகார் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அசாருதீன் நேற்று காலை மீண்டும் விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு வந்து ஜெகன் பாபு மீது நடவடிக்கை எடுத்து எனது மினி லாரியை மீட்டு தர வேண்டும் என போலீசாரிடம் கேட்டுள்ளார்.

அப்போது போலீசார் உரிய பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அசாருதீன் திடீரென போலீஸ் நிலையம் எதிரே பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் விரைந்து சென்று அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பிடுங்கியதோடு, அவர் மீது தண்ணீரை ஊற்றி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் கொடுக்கல்- வாங்கல் தகராறில் எடுத்துச் செல்லப்பட்ட மினி லாரியை மீட்டுத்தர கோரி பழ வியாபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story