தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி அல்லிநகரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 59). கூலித்தொழிலாளி. இவர் தனது மனைவி பரமேஸ்வரியுடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அங்கு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக பரமேஸ்வரி சென்றார். அப்போது கூட்ட அரங்குக்கு வெளியே நின்று கொண்டிருந்த தங்கவேல் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் அவரை தடுத்து நிறுத்தினர்.
பின்னர், அவரை அங்குள்ள குடிநீர் தொட்டியின் கீழ் அமர வைத்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரித்த போது, 3 ஆண்டாக தனது குடும்பத்திற்கும், உறவினர் ஒருவருக்கும் இடையிலான இடப் பிரச்சினை தொடர்பாக பலமுறை மனுக்கள் கொடுத்தும் தீர்வு கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். பின்னர் அவரை போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.