கலெக்டர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி


கலெக்டர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 17 July 2023 6:45 PM GMT (Updated: 17 July 2023 7:16 PM GMT)

கலெக்டர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயன்றார்.

அரியலூர்

தாமரைக்குளம்:

தீக்குளிக்க முயற்சி

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். அப்போது கலெக்டரை சந்திக்க, தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் வந்த பெண், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு, தான் கேனில் கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அந்த பெண் திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர் என்பதும், தற்போது அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் கடந்த மே மாதம் 20-ந் தேதி அந்த பெண்ணின் 7 வயது மகளுக்கு, அவர்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மகன் பரமசிவம் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பரமசிவம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அந்த பெண் கடந்த மாதம் 19-ந் தேதி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருந்தார்.

மிரட்டியதாக...

இந்நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் சிலர், அந்த பெண் வீட்டுக்குச் சென்று, அவரிடம் பரமசிவம் மீது கொடுக்கப்பட்ட புகார் மனுவை திரும்பப்பெற வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர் மீது பொய் வழக்குப் போட்டு, சிறையில் அடைப்பதாக கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த பெண், போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் மாவட்ட கலெக்டரை சந்திக்க வந்ததாகவும், ஆனால் அவரை போலீசார் தடுத்து சோதனை செய்ய முயன்ற நிலையில், அவர் தீக்குளிக்க முயன்றதாகவும், தெரியவந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த பெண் அங்கு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை, கணவர் மற்றும் குழந்தையுடன் வேனில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியலூர் புதுமார்க்கெட் தெருவை சேர்ந்த கருப்பையன் அரை நிர்வாணமாக(சட்டை அணியாமல்) வந்து, கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார். அதில், எங்களது வீட்டின் முன்பு சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி, மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறோம். எனவே, சாக்கடை நீர் தேங்காமல் செல்லும் வகையில் கால்வாயை சரிசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story